சினம்கொள் திரை விமர்சனம்

 

இலங்கை சினிமா- சினம்கொள்
இலங்கை சினிமாவிற்கு என ஓர் வரலாறே உண்டு. இலங்கையில் சிங்களத்திரைப்படங்கள், தமிழ்த்திரைப்படங்கள் என சினிமா பாதை காணப்படுகின்றது. 1972 இல் ஒரு மௌனச் செய்திச் சுருள் திரையிடப்பட்டது. பின் 1903 ஆசியாவின் திரைப்பட சங்கத்தில் கொழும்பு திரைப்படச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1947 "கடவுனு பொறன்துவ" முதல் சிங்களத்திரைப்படமாக இந்தியநாட்டு தயாரிப்பில் வெளியானது. சுதந்திரத்தின் பின் 1951 "பொடி புத்தா" திரைப்படம் இலங்கையின் சுயமான சினிமாவிற்கு அடித்தளம் ஆகும். 1956 "ரேகாவா" சிங்கள பாரம்பரியம் பறைசாற்றும் மாற்றுத்திரைப்படமாக வெளிவந்தது. 
தமிழ் சினிமாவைப் பார்க்கில் சிங்கள நடிகர் நடிகைகளை வைத்து படமாக்கியதோடு சிங்கள மொழிப்படங்கள் மொழிமாற்றமும் செய்யப்பட்டன. 1951 "குசுமலதா" முதல் தமிழ் படமாக வெளியானது. 1951 "தோட்டக்காரி" முதல் வர்ணப்படமாக வெளியிடப்பட்டது. 1978 "சர்மிளாவின் இதயராகம்" தமிழில் வெளியிடப்பட்ட முழுநீள வர்ணத்திரைப்படமாகும்.
இலங்கையில் யுத்தம் காரணமாக சினிமாவில் வீழ்ச்சிப்போக்கு காணப்பட்டதைத் தொடர்ந்து 2006இல் இந்தியா, இலங்கை, ஜேர்மன், இங்கிலாந்து நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களின் கூட்டுத்தயாரிப்பில் “மண்” திரைப்படம் வெளியிடப்பட்டது. 2009 யுத்தத்தின் பின் பல்வேறுபட்ட மாற்றுத் திரைப்படங்கள் வெளியிடப்பட்டன. 
ஈழத்து தமிழ் சினிமா என பெருமைகொள்ளும் அனைத்து திரைப்படங்களையும் நான் மாற்றுத்திரைப்படங்கள் என்றே கூறுவேன் ஏனெனில் அனேகமாக ஈழத்து தமிழ்த் திரைப்படங்கள் தமிழரின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளை பேசுபொருளாக கொண்டுள்ளன. உதாரணமாகச் சொல்லப்போனால் தோட்டக்காரி, மண், சமுதாயம், நதி, மீனவப்பெண், இனி அவன், கயிறு, சினம் கொள் போன்றவற்றைக் கூறலாம். ஈழத்து தமிழ் திரைப்படங்கள் இலங்கையைத் தாண்டியும் சர்வதேச ரீதியில் பலத்த எதிர்பார்ப்பு மிக்கதொன்றாகும். 
2009 யுத்தம் முடிவடைந்து அதற்கு பின்னரான தழிழ் மக்களின் நிம்மதியான வாழ்வியல் கேள்விக்குறியாகவே உள்ளது. தமிழர் இனம், மதம், மொழி, உரிமை என பல வகையிலும் அடக்குமுறையால் ஒடுக்கப்பட்டு புறந்தள்ளப்பட்ட நிலையைக் காண்கின்றோம். இனவழிப்பு முடிவடைந்து இன்று 12 ஆண்டுகள் கடந்தும் ஏற்பட்ட இழப்புக்கள் வடுக்களில் இருந்து தமிழர் மீளமுடியவில்லை. இன அடக்குமுறைகள், மத, மொழி வேற்றுமைகள், நில ஆக்கிரமிப்பு, வளச்சுரண்டல்கள், காணாமல் ஆக்கப்பட்டோர், கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளிகள், தங்கு முகாம் வாழ்வு என எண்ணற்ற பிரச்சினைகள் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளன. 
எனினும் ஒடுக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் பிரச்சனைகள், உரிமைகள், தேவைகள் பற்றி சுதந்திரமாக பேச முடியுமா? ஆம் எனில் எத்தனைபேர் பேசுகிறார்கள் என்பதுவே என் கேள்வி.
அந்த வகையில் ஈழ சினிமாவின் மைல் கல்லாக 2020 ஆம் ஆண்டு சர்வதேச திரையரங்குகளில் வெளியான "சினம்கொள்" திரைப்படத்தின் திரை விமர்சனம் இதோ. 

இயக்குனர் ரஞ்சித் ஜோசப் இயக்கத்தில் இலங்கை-இந்திய தயாரிப்பாளர்களின் கூட்டு முயற்சியில் N.சு.ரகுநாதன் இசையில் அரவிந்தன் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பில் தமிழில் வெளியான சினம்கொள் திரைப்படமானது முழுக்க முழுக்க இலங்கையின் வட பகுதியையும் யுத்தத்தின் பின்னரான தமிழ் மக்களின் அவலங்களையும் சினிமா ஊடாக எம்மவர் படைப்பாக பறைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்ட முற்று முழுதான மாற்றுத் திரைப்படம் என்பதிலிருந்து துளி கூட தவறவில்லை என்பதே உண்மை. 

யுத்தம் முடிவுக்குவந்த பின்னர் ஈழ வலிகளைப்பற்றிப் பேசும் படைப்புக்கள் தணிக்கைக்குட்படுத்தப்படுவது நாம் அறிந்ததே. ஏனெனில் போர், இழப்பு, குருதி என கனத்த வசனம், காட்சி இடம்பெற்றிருக்கும். அவ்வாறே தமிழ் மக்களின் கடந்து வந்த பாதையை பதிவிடும் படைப்பான இச் சினம்கொள் திரைப்படம் இலங்கையில் வெளியிட தடைவிதிக்கப்பட்டு 2020 பிரித்தானியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் திரையிடப்பட்டு உலகத் தமிழர் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றது. பின்னர் தணிக்கைக்குழு ரு தர சான்றிதழ் வழங்கியது. ஈழப்பின்னணியில் உருவான திரைப்படத்திற்கு ரு சான்றிதழ் கிடைத்த முதல் பெருமை இச் சினம்கொள் திரைப்படத்தையே சாரும். பின்னர் இலங்கையில் 2021 மார்ச் 21 யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 

யுத்தத்தின் பின் முன்னாள் போராளியாக 08 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து முடித்து வருவதாக ரெயில் நிலையத்திலிருந்து காட்சிகள் ஆரம்பமாகின்றன. சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வரும் அமுதன் கிளிநொச்சி ரெயில் நிலையத்தில் இறங்கி தனது சொந்த ஊரான முல்லைத்தீவு கேப்பாபுலவு கிராமத்திற்கு தன் வீடு,காணியை பார்க்கச் செல்வதும் அங்கு இராணுவ ஆட்சி கண்டு மனம் நோவதும், காணாமல் போன மனைவி, குழந்தையை தேடி அலைந்து கண்டுபிடிப்பது, தன்னுடன் இருந்த நண்பர்களைச் சந்திப்பதும், தமது போர்க்கால வாழ்க்கை பற்றி பேசுதும், வேலை தேடி அலைவதும், அதனால் உருவாகும் பிரச்சினை பற்றியதுமாக காட்சிகள் அமைகின்றன. 
பாத்திரப் பிரதிபலிப்புக்கள் எனும் போது தென்னிந்திய சினிமாவில் கற்பனை கதாநாயக விம்பம் மத்தியில் கறுப்பாய் களையாய் எம் மண் வாசனையோடு தழிழரின் காவலனாய் வீரமிக்க முன்னாள் போராளியாக சினம்கொள் திரைப்பட நாயகன் அமுதன் காட்சியளிக்கின்றார். 
சினிமாவில் அழகையும் கவர்ச்சியையும் பிரதானமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட கதாநாயகிகளின் விம்பத்தை உடைத்து கணவனை கைதியாக பறி கொடுத்து, பெற்றவர்களால் ஒதுக்கப்பட்டு தன் குழந்தைக்கு தாயாய் தந்தையாய் காவலாய் கூலித் தொழில் புரியும் நாயகி மிடுக்கிடும் சாதாரண தோற்றத்தில் ஆனந்தி எம்மோடு ஒருவராகிறாள். 
ஏனைய பாத்திரப்படைப்புக்கள் அனைத்தும் எளிமையும் இயல்பான வாழ்வியல் புலத்தையும் எமது தேசத்து அடையாளத்திற்கும் பொருத்தமாக யாழினி, தழிழரசன், காண்டீபன் போன்ற பாத்திரங்கள் கதையோடு ஒன்றித்துச் செல்கின்றன. அனைத்துக் காட்சிகளிலும் யுத்த பாதிப்பின் அடையாளங்களாக பாத்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 
தமிழ் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் ஈழத்தமிழ் மொழிநடைகளும், காட்சிகள் நகரும் இடங்களாக கௌதாரிமுனை, நந்திக்கடல், கேப்பாபுலவு, வற்றாப்பளை அம்மன் கோவில், தமிழ் மன்னர் சிலைகள், கிளிநொச்சி, ஆரியகுளம், கைதடி, கோப்பாய், நல்லூர் முருகன் ஆலயம் போன்றனவும், கதாபாத்திரங்களின் பெயர்கள் அனைத்தும் தமிழர் உணர்வை வெளிப்படுத்துனவாகவும் அமைந்திருந்தன.
சிங்கள மொழியின் மேலாதிக்கம் எம் தேசத்தில் படுக்க கூட உரிமையற்று துரத்தப்படுவது, கலாச்சார சீரழிவு, இளைஞர்களின் பொறுப்பற்ற தன்மை போன்றனவும் காட்டப்படுகின்றன. அத்துடன் திரைப்படத்தின் வசன நடையை நோக்கின், தோற்கடிக்கப்பட்ட இனத்தின் வலிகளை பிரதிபலிப்பாகவே காணலாம். அழுத்தமான சொற்கள், வசனங்களில் தீபச்செல்வனின் ஈழம் மீது கொண்ட பற்று வெளிப்படுகின்றது. உதாரணமாக, ‘‘நாங்கள் எல்லோரும் யாரிட பிள்ளையள் தெரியும் தானே’’இ   ‘துரோகங்கள் எங்களுக்குப் புதுசா’ போன்ற வசனங்கள் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைப்பதாக அமைந்துள்ளன. இத் திரைப்படத்தின் பாடல் வரிகள், இசை தமிழர்கள் வாழ்வில் ஏற்பட்ட இன்னல்களைப் படம் பிடித்துக் காட்டுவதுடன், அவர்களின் ஏக்கம் மற்றும் பரிதவிப்புக்களை வெளிப்படுத்துதாக அமைந்துள்ளன. 
திரைப்பட காட்சியமைப்பில் கமரா அசைவு, காட்சித்தொய்வு போன்ற சிறு வழுக்கள் காணப்பட்டாலும் இயக்குனர் கூற முற்பட்ட விடயங்கள் மக்களிடையே எளிதில் சென்றடைந்தமை பாராட்டத்தக்கதொன்றாகும். 
ஈழ உணர்வுகளை மக்களோடு பகிர நினைத்த இயக்குனரின் மனக்குமுறல்களை நாம் விட்டுச் செல்ல முடியாது. எம் அடையாளங்களை காட்சியாக்கி மண் மீதான பற்றை அதிகப்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். இன்றைய இளைய தலைமுறையினர் பலர் தடம் மாறிச்செல்லும் காலகட்டத்தில் தமிழ் உணர்வையும் தேசப்பற்றையும் உணர்த்தும் வலி நிறைந்த ஈழத்துப் படைப்பான சினம்கொள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படமாகும். 
இலங்கையில் போர் நிறைவடைந்து விட்டது என்றும் நல்லிணக்கமிக்க சுமூகமான சூழ்நிலை நிலவுகிறது என்றும் எண்ணுவோர் கட்டாயமாப் பார்க்க வேண்டிய திரைப்படமாக சினம்கொள் அமைகின்றது.  


Comments

Popular posts from this blog

பூகோளமயமாதலும் பண்பாட்டு மாற்றமும்

பெண் கல்வியின் முக்கியத்துவம்

இயற்கையை பாதுகாப்போம்.