மலையக மண்ணின் மகத்தான பொழுதுகள்
மலையகம் என்றதுமே நினைவுக்கு வருவது மலைகளும் நீர்வீழ்ச்சிகளும் தேயிலைத்தோட்டங்களுமே. ஆனால் மலையகமும் அங்கு வாழும் மக்களின் வாழ்வியல் பற்றியும் தாழ்நிலத்தில் வாழும் எம்மவர்களுக்கு விந்தையே.
அழகின் உறைவிடமாகவும் நாட்டின் முதுகெலும்பாகவும் மக்கள் வாழ்கின்ற மலையகத்தில் 3 நாட்கள் பயணித்த என் அனுபவம் இதோ!
மலையக மண்வாசனை ஓர் புதுவித உணர்வைத்தர நண்பர் வீட்டாரின் தேனீருடனான வரவேற்பு இன்னமும் இதமாக இருந்தது. காலநிலைக்கு ஏற்ற கம்பளி உடையுடன் மலைச்சாரலில் தேயிலைத்தோட்டங்களுக்கிடையே ஒரு நடை பயணம்.
காலை கதிரவன் மூடு பனியில் முத்தமிடும் அழகும் பள்ளி செல்லும் குழந்தைகளின் அழகும் தேயிலை கொய்ய பெண்கள் கூடையுடன் மலையேறும் அழகும் தனியழகுதான்.
செல்லும் வழியில் கங்காணியை சந்திக்கும் வாய்ப்புக்கிட்ட அவரிடம் வேலை நேரம், இடைவேளை, விடுமுறை, சம்பளம், ஓய்வுக்காலம், தேயிலை பராமரிப்பு, உற்பத்தி, ஏற்றுமதி என பல விடையம் அறிய முடிந்தது.
8-4 மணிநேர வேலை, 1-2 இடைவேளை, சனி,ஞாயிறு விடுமுறை, 1கிலோ கொழுந்து எடுக்க 50 ரூபாய், மாத சம்பளம் 10ம் திகதியும், முற்கொடுப்பனவு 25ம் திகதியும் கொடுக்கப்படுவதோடு, பெண்களுக்கு 55வயதிலும் ஆண்களுக்கு 60 வயதிலும் ஓய்வுவழங்கப்படுவதாக அறியமுடிந்தது.
தலவாக்கலை தேயிலைத் தொழிற்சாலையில் உற்பத்தி தரப்பிரிப்பு தொடர்பாக பல விடயங்களை ஓர் சுற்றுலாப் பயணியாக தெரிந்துகொள்ள அங்காருந்தோர் உதவினார்கள்.
கொழுந்து கிள்ள செல்லும் பெண்கள் குழந்தைகளை பிள்ளை மடுவங்களில் விட்டுச்செல்வதும் காணமுடிந்தது.
மலையக மக்களின் லய வாழ்க்கைக்கும் அவர்களின் உரிமைப் போராட்டங்களுக்கும் மத்தியில் இன்றைய காலத்தில் அதிகளவான மலையக மாணவர்கள் கல்வியில் செழிப்பது பாராட்டத்தக்கவிடயமாகும்.
மலையக பயணம் என்னால் ஓர் அனுபவமாக மட்டுமல்லாது ஓர் பாடமாகவே கொள்ளப்பட்டது.

Comments
Post a Comment