இயற்கையை பாதுகாப்போம்.
இயற்கை அற்புதமான படைப்பு. உலகில் எண்ணற்ற அழகுகளை இயற்கை எமக்கு தந்துள்ளது. இந்த இயற்கை காட்சிகளின் இனிமையில் மனதைப் பறிகொடுக்காதவர் யாரும் இருக்க முடியாது. இயற்கை அன்னை வழங்கும் இனிய காட்சிகள் எமக்கு இணையற்ற இன்பம் தருகின்றன. அப்படிப்பட்ட இயற்கை வளங்கள் இன்று நவீனவளர்ச்சியினால் அழித்தொழிக்கப்படுகின்றன.
ஆரம்பகாலத்தில் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த மனிதன் எப்போது இயற்கையை மாற்றியமைக்க தொடங்கினானோ அன்றே இயற்கை வளங்கள் அழியத்தொடங்கிவிட்டன. பழந்தமிழர்கள் இயற்கையுடன் ஒன்றித்து வாழ்ந்தனர். இவர்கள் தமது வாழ்க்கையை இயற்கையின் இனிய சூழலோடு அமைத்துக் கொண்டனர். அவர்கள் தாம் வாழ்ந்த சூழலினை பண்படுத்தி இயற்கை முறை விவசாயமும் மேற்கொண்டனர். ஆனால் இன்று நவீன வாழ்க்கைக்கு பழக்கப்பட்ட மனிதன் இயற்கையை அழித்துக் கொண்டதோடு இயற்கை மூலமான நன்மைகளையும் மறந்தவனாக காணப்படுகிறான். இயற்கையை மறந்து செயற்கை உலகின் மாற்றத்தை எதிர்கொள்ளும் மானிடர்கள் தம் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். மனிதர்களின் செயற்பாடுகளால் இயற்கை பாதிக்கப்படுகிறது. இயற்கையானது நீர், நிலம், ஆகாயம், தீ,காற்று ஆகியவற்றுடன் இணைந்து காணப்படுகிறது. ஆனால் இவையெல்லாம் இன்று மனித செயற்பாடுகளால் மாசடைந்து இயற்கையை அழிக்கிறது.
“நீரின்றி அமையாது உலகு” உலக உயிர்களுக்கெல்லாம் மிக முக்கியமாக அமைவது நீர். அந்நீர் தருவது மழை. காடுகளை அழிப்பதால் நீரியல் வட்டம் பாதிக்கப்பட்டு காலநிலையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மனிதர்கள் நீரில் தேவையற்ற கழிவுப்பொருட்களை இடுவதனாலும், எண்ணெய்க் கழிவுகள் நீரோடு கலப்பதனாலும் நீர் மாசடைகிறது.இவ்வாறு மாசடைந்த நீரைப் பருகுவதால் மனிதனுக்கு பல நோய்கள் ஏற்படுகிறது.
அடுத்த படியாக காற்று மாசு பற்றி நோக்குமிடத்து அதிகரித்து வரும் வாகனங்களிலிருந்து வெளிவரும் புகை,தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகை,போன்றவற்றின் மூலம் காற்று மாசடைகிறது. இரசாயன பதார்த்தங்கள் மூலம் நிலம் மாசடைகிறது.
இவ்வாறு மனிதனின் முறையற்ற செயற்பாடுகளால் இயற்கை பாதிக்கப்படுகிறது. ஆரம்பகால மனிதர்கள் இயற்கையை பேணினார்கள். அதனுடன் இணைந்தார்கள். தம் வாழ்வை இயற்கையுடன் பங்கிட்டார்கள். அதனால் இயற்கையும் அவர்களை அரவணைத்துக் கொண்டது. ஆனால் தற்காலத்தில் நாம் இயற்கையை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அதன் இயல்பான எந்த வழியையும் நாம் அனுமதிப்பதில்லை. மரங்களை வெட்டுதல், பிளாஸ்டிக் பயன்பாடு, பொலித்தீன் பாவனை போன்ற காரணங்களால் இயற்கையை சேதப்படுத்துகிறோம் இதனால் நாம் மட்டுமன்றி நம் சமூகமும் பாதிப்பை எதிர்நோக்குகிறது.
ஆகையால் சமூகத்தில் அக்கறை கொண்டு செயற்பட வேண்டியவர்களாக ஒவ்வொருவரும் மாற்றவேண்டும் அதற்கு சூழலை பாதுகாப்பது அவசியமாகும்.

Comments
Post a Comment