வாசிப்பின் அவசியமும் நூலக உருவாக்கமும்

 

வாசிப்பை ஊக்குவித்தலும் நூலக உருவாக்க முயற்சியும் 

 

 ‘சமூகத்தில் இல்லாதவற்றை செய்ய விளைவது அபிவிருத்தி அல்ல, சமூகத்தின் தேவையை கண்டறிந்து அதனை செய்வதே ஒரு பயனுள்ள அபிவிருத்தி

 

அந்த வகையில் இது வாசிப்பு மாதம் ஆகையால் வாசிப்பும் நூலகமும் தொடர்பாக பார்ப்பது பயனாக இருக்கும். வாசிப்பு ஏன் முக்கியம் என்ற கேள்வி உங்களில் பலருக்கும் எழலாம். ஏன் நாங்கள் வாசிப்பது இல்லையா என்று கூட நீங்கள் கேள்வி எழுப்பலாம். ஆம் தினமும் திறன்பேசிக்குள் மூழ்கித் திழைக்கும் நாம் அதனூடாக பல விடயங்களை அறிகின்றோம். ஆனால் புத்தகங்களை நேரம் ஒதுக்கி எத்தனைபேர் வாசிக்கிறோம் என்றால் அது கேள்விக்குறிதான். ஒருவர் புத்தகத்தைத் தொட்டுணர்ந்து அதை வாசித்துப் பயனடைவது போன்று வேறு எவ்வழியில் வாசிப்பதாலும் திருப்திபெற முடியாது. காரணம் நூல் தலைசிறந்த நண்பன் என்பார்கள்  சிறந்த நண்பன் ஒருவன் எமக்கு அருகில் இருந்து எம்மை சரியாக வழிநடத்துவது போன்ற உணர்வை ஒரு நல்ல புத்தகத்தால் தர முடிகின்றது. இன்றைய தலைமுறையினருக்கு வாசிப்புப் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது என்றே கூறவேண்டும். வெறுமனே கல்வி கற்பதனால் கல்வியாளன் ஆகிவிடமுடியாது. பரந்த அறிவிற்கும் சிந்தனைத்திறனிற்கும் ஆக்கபூர்வமான முடிவுகளை எடுக்கவும் வாசிப்பு மிக முக்கியமாகின்றது. ‘Readers are Leadersஎன்பார்கள். நூல்கள் எவ்வளவிற்கு வாசிக்கின்றோமோ அவ்வளவிற்கு சொல்லாற்றலும் எழுத்து ஆளுமையும் அதிகரிக்கும்

 

இவ்வாறு சமூகத்தில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் அதை கல்வியோடு இணைந்த நடைமுறையாக்கவும் எடுக்கப்பட்ட முயற்சியில் ஒன்றுதான் விருட்சம் நூலக உருவாக்கம். வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள நெடுங்கேணி பிரதேசத்தில் மாமடு கிராம சேவகர் பிரிவு 5 கிராமங்களை உள்ளடக்கிய 390 குடும்பங்களைத் தன்னகத்தே கொண்ட பகுதியாகும். இப்பகுதியில் வசிக்கும்  200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் நூல் ஆர்வலர்களுக்கும் நூலகம் இல்லாமை ஒரு பெரும் குறையாகவே காணப்பட்டுவந்தது. அச் சமூகத்திலிருந்து கல்வி கற்கும் ஒருவராக நூலகம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்த எனக்கு எமக்கான நூலகம் ஒன்றை உருவாக்கும் வாய்ப்புக் கிடைத்தது

 

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையானது மாணவர்களை வெறுமனே கற்பித்தல் என்பதையும் தாண்டி அனுபவ ரீதியிலும் செயற்பாட்டு ரீதியிலும் பூரண திறன்மிக்க மாணவர்களாக உருவாக்க பயிற்றுவிக்கும் ஒரு துறையாகும். அந்தவகையில் பாடவிதானத்திற்குட்பட்ட அபிவிருத்தி தொடர்பாடல் எனும் பாடப்பரப்பு எம்மை சமூகத்தில் அக்கறைமிக்கவர்களாக செயற்பட வித்திட்டது. அபிவிருத்தி என்பது யாது, சமூகத்திற்கு எவ்வாறான அபிவிருத்தி பொருத்தமானது என கண்டறிந்து அதை வெறுமனே வாய்ப்பேச்சாக நிறுத்திவிடாது அதனைச் செயற்படுத்திக் காட்டுவதற்கு எம்மோடு பலமாக துறைத்தலைவர் கலாநிதி சி.ரகுராம் அவர்களும் துறைசார் அனைவரும் ஒத்துழைத்து வருகின்றனர்

 

கிராமத்திற்கு பொதுவான நூலகம் அமைப்பது தொடர்பில் உத்தேசித்தபோது மூலதனம் பெரும் தடையாக இருந்தபோதும் பிரதேசசெயலாளர், கிராமசேவகர், கிராம அமைப்புக்கள், பாடசாலைச் சமூகம், பொதுமக்கள், தன்னார்வலர்கள், நலன்விரும்பிகள், புலம்பெயர் உறவுகள், நண்பர்கள் என அனைவரும் கட்டட உருவாக்கத்திலும் நூல்களை பெற்றுக்கொள்வதிலும் கட்டடத்திற்கான தளபாடங்களை வழங்குவதிலும் ஆதரவளித்திருந்தனர். இந்த நூலகமானது மிகக் குறுகிய காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டமை முயற்சியின் முதல் வெற்றிப்படியாகும். நூலகத்தின் ஆணிவேர் புத்தகங்களாகையால் முகப்புத்தகம் ஊடாகவும் கடிதங்களூடாகவும் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க யாழ்ப்பாண சிறகுகள் அமைப்பு, நல்லூர் யன்ஸ் கழகம், மல்லாகம் புத்தகப்பண்பாட்டு பேரவை மற்றும் சமூக ஆர்வலர்கள், புலம்பெயர் உறவுகள் என பலர் சிறுவர் முதல் பெரியோர் வரை பயன்படுத்தக்கூடிய கிட்டத்தட்ட 600 நூல்களை வழங்கி இவ் முயற்சியை ஊக்குவித்து வருகின்றனர்

 

தற்போது நூலகம் பயன்பாட்டுக்கு வந்த ஓர் இரு வாரங்களில் சிறுவர்கள், மாணவர்கள் தமக்கான நூல்களை வாசிக்கும் நிலையை காணமுடிகின்றது. இந்த நூலக உருவாக்கம் தொடர்பில் கிராம மக்கள் பலர் தமது கருத்துக்களைத் தெரிவிக்கும்போது..

 

பிள்ளைகள் வீட்டில் புத்தகம் வாசிப்பதைக் காணமுடிவதில்லை. நூலகம் கட்டியதும் வாசிக்க வருவது மகிழ்ச்சியை தருவதாக கூறுகின்றனர். மேலும் கிராமசேவகர் இவ் நூலக உருவாக்கம் தொடர்பில் குறிப்பிடும்போது இது போன்ற இளைய சமுதாயத்தினர் சமூகம் மீதான சிந்தனைகள் அதிகரித்து சமூகம்சார் செயற்பாடுகளில் ஈடுபட முன்வருவது வரவேற்கத்தக்கது என குறிப்பிட்டிருந்தார்.

 

நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை கல்விநடவடிக்கைகள் வீழ்ச்சியடைந்திருந்த காலப்பகுதியில் மாணவர்கள் இணையவழி கல்வி என்று திறன்பேசியிலேயே தமது அதிகளவு நேரத்தை செலவிடுகின்றனர். இதனால் திறன்பேசியில் விளையாட்டு, முகப்புத்தகம் என்று திசை மாறும் இளம் சமுதாயத்தை வாசிப்பையும் கிரகித்தல் திறனையும் மறந்துவரும் நிலையை கண்முன்னே பார்க்கின்றோம். சமூகத்தில் இவ்வாறான நிலையை மாற்ற நூலக உருவாக்கங்களும் வாசிப்பு ஊக்குவிப்புமே சிறந்த வழியாக இருக்கும் என நம்புகின்றேன். பெற்றோர்கள், ஆசிரியர்கள் தினமும் வாசிப்புப் பழக்கத்தை அதிகரிப்பதற்கு என நேரம் ஒன்றை ஒதுக்கி பிள்ளைகளுக்கு வாசிக்க ஊக்கப்படுத்தலாம். ஒவ்வொரு வீடுகளிலும் சிறிய நூலகம் ஒன்றை அமைத்து சிறு போட்டிகளை வைத்து பரிசுப்பொருட்கள் வழங்கி சிறுவர்களுடன் பெரியர்களும் நூல்களை, பத்திரிகைகளை வாசித்து வாசிப்பை ஊக்குவிக்க முடியும். வெறுமனே சிறுவர்கள் வாசிப்பதை மறந்துவிட்டார்கள், வாசிப்பு நலிவடைந்து செல்கின்றது என்று பேசிக்கொண்டிருப்பதை விட இது போன்று இளைய சமூகம்  நூலக உருவாக்கத்திலும் வாசிப்பை ஊக்குவிக்கவும் முன்வரவேண்டும்மாற்றம் என்பது எடுத்தவுடன் நிகழ்ந்துவிடாது ஆனால் முயற்சியை தொடரும் சந்தர்ப்பத்தில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்பதே எனது நம்பிக்கை. அடுத்த தலைமுறையினரின் திறமைக்கும் முன்னேற்றத்திற்கும் பாதை அமைத்துக் கொடுக்கவேண்டியது கல்விகற்ற  சமூகத்தின் கடமையாகும்.   





Comments

Popular posts from this blog

பூகோளமயமாதலும் பண்பாட்டு மாற்றமும்

பெண் கல்வியின் முக்கியத்துவம்

இயற்கையை பாதுகாப்போம்.